சிறுசேமிப்பும் அதன் பயன்களும்
"பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது திருவள்ளுவரின் அமுத மொழியாகும். அம்மொழி கிணங்க மக்கள் வாழ்க்கைக்கு பொருள் எவ்வளவு முக்கியமானது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட பொருளை ஈட்டுவதற்கு நேர்மையான முறையில் நம் உழைப்பின் மூலம் ஈடுபடுதலே மிகச் சிறந்தது அதுவே இன்பம் தரும். ஈட்டிய பொருள்கள் அனைத்தையும் செலவு செய்துவிட்டால் பிற்கால வாழ்விற்கு என்ன செய்வது.? எனவே நாம் கடினப்பட்டு உழைத்த பணத்தை எப்படி சிக்கனமாக செலவு செய்வது,மீதம் உள்ள பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும்,பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போம்.
பணத்தின் சிறப்புகள்
"பணம் பத்தும் செய்யும்", "பணம் பாதாளம் வரை பாயும்" மற்றும் "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்" என்பன பணத்தின் தேவையை உணர்த்தும் பழமொழிகள் ஆகும். "பணம் இல்லாதவரை மனைவியும் விரும்ப மாட்டாள்" "பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள்" என்பது ஒளவையின் கருத்து ஆகும். "பொருள் பெற்றவரை இந்த உலகம் மதிக்கும் சிறப்பு செய்யும்" எனவே பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
செலவும் சிக்கனமும்
நம்முடைய செலவை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை, 1.அன்றாட செலவுகள்
2.எதிர்பாராத செலவுகள்
3.எதிர்காலச் செலவுகள் என வகைப்படுத்தலாம்.
உணவு, உடை, சிற்றுண்டி இவற்றிற்காக நாள்தோறும் நாம் செலவழிப்பது அன்றாடச் செலவுகள் ஆகும்.
நோய் விபத்து முதலியவற்றால் ஏற்படும் செலவு எதிர்பாராத செலவாகும்.
முதுமைக் கால அமைதியான வாழ்வுக்காக சேமிப்பும் பண்பு எதிர்கால செலவாகும்.
சேமிப்புக்கு முதற்படி "சிக்கனம்" வீண் செலவுகளையும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமே அளவறிந்து செலவு செய்ய வேண்டும்.
"சிக்கனம் இன்மை வறுமையை விட கொடியது" என்று கூறுவார்கள்.
சேமிக்கும் வழிகள் முறைகள்
சின்ன உயிர்களாகிய எறும்புகளும் தேனீக்களும் கூட சேமிக்கும் பழக்கத்தை நமக்கு நன்கு உணர்த்துகின்றன.
அஞ்சலகங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாகவும் பாதுகாப்பாகவும் நம் பணத்தைப் பாதுகாக்கும் வங்கிகளில் கணக்கை தொடங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிரந்தர வைப்பு நிதி மற்றும் கால வைப்பு முறைகளில் சேமிக்கலாம்.
ஆயுள் காப்பீட்டு கழகத்திலும் சேமிப்பதற்கு பல வழிகள் உண்டு
ஆனால் நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து போகக்கூடாது. அது நிறைய லாபம் எனக் கருதி முதலை இழக்கும் செய்கை ஆகிவிடும்.
"பேராசை பேரிழப்பு" நம் முன்னோர்களின் நமக்கு கூறியதை மறந்துவிடக்கூடாது.
சேமிப்பின் பயன்கள்:
நம் சேமிப்பு "சிறு துளி பெரு வெள்ளம்" என்பதுபோல பெருகி பெருந்தொகையாக நமக்கு கிடைக்கும். இளமையிலேயே சேமிக்கும் சிறந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் இது நம் வாழ்வை எந்த வித தடைகளும் இன்றி நடத்த உதவி செய்யும்.
நம் சேமிக்கும் பணம் அரசின் பல திட்டங்களுக்கு உதவுகிறது ஏழைகளுக்கு கடன் வசதி செய்து தரவும் நாட்டு மக்களுக்கு உதவி செய்யவும் பயன்படுகிறது நம் சேமிப்புக்கு நமக்கு வட்டியும் கிடைக்கின்றது.
நாம் சம்பாதிக்கும் பொருள் மிகக் குறைவாக இருப்பினும் அதற்குள்ளே செலவை அடக்கி ஒரு பகுதியை சேமிப்பதில் சிறந்த வாழ்வு வாழலாம் என்பது திருவள்ளுவரின் உடைய வாக்கு.
"சேமிப்போம் வளமான வாழ்வு பெறுவோம்"
மேலும் அறிய கிளிக் செய்யவும்